புதுடெல்லி: உத்தர பிரதேச சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: மகா கும்பமேளாவை சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து விமர்சித்து வந்தது. ஆனால், இந்த நிகழ்வின்போது ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றுள்ளது. படகோட்டிகள் வாழ்க்கை சுரண்டப்படுவதாக சமாஜ்வாதி புகார் கூறி வருகிறது. பிரயாக்ராஜில் 130 படகுகளை வைத்து பிழைத்த ஒரு படகோட்டி குடும்பம் மகா கும்பமேளாவின் 45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்து சாதனை படைத்துள்ளது. இவரது ஒரு படகு மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.53 ஆயிரம் வீதம் 45 நாட்களில் சுமார் ரூ.23 லட்சம் சம்பாதித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பெரும்பாலான பக்தர்கள் திரிவேணி சங்கமத்திற்கு படகில் சென்று புனித நீராடினர். இதற்காக, சுமார் 2,500 படகுகள் இரவும், பகலும் இயக்கப்பட்டன. இதற்காக, பக்கத்து மாவட்டங்களிலிருந்து படகுகள் கொண்டு வரப்பட்டன. ஒரு பயணிக்கு ரூ.2,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ராஜகுளியல் நடைபெற்ற 6 புனித நாட்களில் இந்த தொகை கூடுதலாகவும் வசூலிக்கப்பட்டது.