இந்தியா

ஆர்.ஜி.கர் பாலியல் வன்கொடுமை வழக்கு: கொல்கத்தா போலீஸாரிடம் சிபிஐ விசாரணை

செய்திப்பிரிவு

ஆர்.ஜி.கர் மருத்துவமனை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஆதாரங்களை அழித்தது தொடர்பான வழக்கில் கொல்கத்தா போலீஸாரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தன்னார்வலர் சஞ்சய் ராய்க்கு கொல்கத்தா அமர்வு நீதிமன்றம் கடந்த ஜனவரி 20-ம் தேதி ஆயுள் தண்டனை விதித்தது.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றச் சதி மற்றும் ஆதாரங்களை அழித்தது தொடர்பான வழக்கில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு கொல்கத்தா போலீஸார் 11 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதை ஏற்று விசாரணைக்கு ஆஜரான போலீஸாரிடம் சிபிஐ நேற்று விசாரணை நடத்தியது.

இந்த போலீஸார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 மற்றும் 10-ம் தேதி ஆர்.ஜி.கர் மருத்துவமனை காவல் சாவடி மற்றும் அப்பகுதி காவல் நிலையத்தில் பணியாற்றியவர்கள் என கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கொல்கத்தா போலீஸார் பலரிடம் சிபிஐ ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது. குற்றத்தை முதலில் விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்த மூத்த அதிகாரிகளும் இதில் அடங்குவர்.

SCROLL FOR NEXT