புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் உடல் எடை குறித்து விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமதுவை அக்கட்சி கண்டித்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ரோஹித் ஷர்மா, 17 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, ரோஹித் ஷர்மாவை விமர்சித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது தனது எக்ஸ் பக்கத்தில், ரோஹித் உடல் பருமனான வீரர். அவர் தனது எடையைக் குறைக்க வேண்டும். அதோடு, இந்திய கேப்டன்களில் கொஞ்சம்கூட ஈர்ப்பை ஏற்படுத்தாத கேப்டன் இவர்தான். இவர் ஒரு சாதாரண வீரர். அதிர்ஷ்டத்தால் இந்திய அணியின் கேப்டனாகிவிட்டார் என விமர்சித்திருந்தார்.
ஷாமா முகமதுவின் இந்த கருத்து சமூக வலைதளத்தில் வைரலாகி, ரோஹித் ஷர்மாவின் ரசிகர்களை மட்டுமின்றி, பாஜகவினரையும் கோபத்துக்குள்ளாக்கியது. அவர்களின் கடும் பதில் விமர்சனத்தை அடுத்து ஷாமா முகமது தனது பதிவை நீக்கினார்.
இந்நிலையில், ஷாமா முகமதுவை காங்கிரஸ் கட்சி இன்று (திங்கள்கிழமை) கடுமையாக கண்டித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அதோடு, கிரிக்கெட் ஜாம்பவான் ரோஹித் ஷர்மா குறித்த ஷாமா முகமதுவின் கருத்துக்கள் கட்சியின் கருத்து அல்ல என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.