இந்தியா

மகா கும்பமேளாவுக்கு 16,000 ரயில்கள் இயக்கப்பட்டன: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

செய்திப்பிரிவு

பிரயாக்ராஜ்: பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவுக்கு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு, சுமார் 5 கோடி பக்தர்கள் அழைத்து வரப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

இதுகுறித்து அவர் பிரயாக்ராஜில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரயாக்ராஜில் கடந்த 2019-ல் நடைபெற்ற கும்பமேளாவுக்கு சுமார் 4,000 ரயில்கள் இயக்கப்பட்டன. இம்முறை 3 மடங்குக்கும் அதிகமாக ரயில்களை இயக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் நான்கு மடங்குக்கும் அதிகமான ரயில்கள் இயக்கியுள்ளோம்.

இதற்கான பணிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்றன. 16,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் மூலம் 4.5 கோடி முதல் 5 கோடி பயணிகள் மகா கும்பமேளாவுக்கு அழைத்து வரப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஒன்றிணைந்து பணியாற்றிய ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

மகா கும்பமேளாவுக்காக ரயில்வே துறை சார்பில் சுமார் ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்பட்டது. கங்கை நதியின் மீது ஒரு புதிய பாலம் உட்பட 21-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் கட்டப்பட்டன. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

SCROLL FOR NEXT