இந்தியா

1984 கலவர வழக்கில் காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த கலவரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

முன்னதாக, இந்த வழக்கில் சஜ்ஜன் குமாரை குற்றவாளி என டெல்லி நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா கடந்த 12-ம் தேதி அறிவித்தார். மேலும், தற்போது திகார் சிறையில் இருக்கும் சஜ்ஜன் குமாரின் உடல் மற்றும் மனநிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிறைத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக இருந்தால் அதற்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறை இது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி காவேரி பவேஜா, குற்றவாளி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

"அவர் (சஜ்ஜன் குமார்) ஒரு பங்கேற்பாளர் மட்டுமல்ல, கும்பலுக்கு தலைமை தாங்கியவர் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளது” என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

வழக்கின் பின்னணி: பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் கடந்த 1984-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்றவர்கள் சீக்கியர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது, சரஸ்வதி விஹார் பகுதியில், நவம்பர் 1, 1984 அன்று ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களின் வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு, வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஜஸ்வந்த் சிங்கின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், பஞ்சாபி பாக் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்தது. பின்னர், சிறப்பு புலனாய்வுக் குழு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சஜ்ஜன் குமாருக்கு எதிராக முகாந்திரம் இருப்பதாக டிசம்பர் 16, 2021 அன்று நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT