இந்தியா

“பிரதமரின் பிஹார் வருகை குறித்து கேள்வி எழுப்புகின்றனர்; ஆனால்…” - மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான்

செய்திப்பிரிவு

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி பிஹார் மாநிலத்துக்கு தொடர்ச்சியாக வருகை தருவது குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இதற்கு முன்பும் அவர் பல்வேறு முறை அவர் இங்கு வந்து சென்றதை அறியாமல் அவர்கள் பேசுகின்றனர் என மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

லோக் ஜன சக்தி (ராம் விலாஸ் அணி) கட்சியின் தலைவரான சிராக் பாஸ்வான் திங்கள்கிழமை (பிப்.24) அன்று, பிரதமர் மோடி பிஹார் மாநிலத்துக்கு தொடர்ச்சியாக வந்து செல்வது குறித்து பேசியுள்ளார்.

“பிரதமரின் பிஹார் வருகை குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு இதற்கு முன்பே பிரதமர் இங்கு வந்துள்ளார் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. இன்று பிரதமர் பாகல்பூரில் இருந்தார். நாட்டின் பிரதமர், பிஹார் மாநிலத்தின் மீது இவ்வளவு முக்கியத்துவமும், கவனமும் செலுத்துவது நம் மாநிலத்துக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் அவர். முன்னொரு காலத்தில் தேசத்தில் வெறும் 2 எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமே என இருந்த நிலை கடந்து, இப்போது பிஹாரில் 2 எய்ம்ஸ்கள் உள்ளன. பிஹாரில் மக்கானா வாரியம் அமைக்கப்பட்டது எங்களுக்கு ஒரு பெரிய விஷயம். ஏனெனில், மக்கானா பிஹாரில்தான் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது” என அவர் கூறினார்.

இந்த ஆண்டின் இறுதியில் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பிஹார் மாநிலத்தின் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை பாஜக எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 243 தொகுதிகளை கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் கடந்த தேர்தலில் 85 இடங்களில் பாஜகவும், 43 இடங்களில் ஐக்கிய ஜனதா தளமும் வென்றுள்ளன.

SCROLL FOR NEXT