இந்தியா

ஓடிடி, சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த கடுமையான சட்டங்கள்: நாடாளுமன்ற குழுவிடம் மத்திய அரசு உறுதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த ரன்வீர் அல்லபாடியா (30). பல்வேறு யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார். அவரது சேனல்களில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர். யூ டியூப் சேனல்கள் மூலம் மிக குறுகிய காலத்தில் ரூ.60 கோடி மதிப்பு சொத்துகளை அவர் சம்பாதித்து உள்ளார்.

அண்மையில், 'இண்டியா காட் டேலன்ட்' என்ற நிகழ்ச்சியில் ரன்வீர் அல்லபாடியா நடுவராக பங்கேற்றார். அப்போது அவர் பேசிய ஆபாச கருத்துகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைக்கு பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தலைமையிலான நாடாளுமன்ற குழு அண்மையில் கடிதம் அனுப்பியது. இதற்கு மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை நாடாளுமன்ற குழுவில் பதில் மனுவை சமர்ப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த கடுமையான சட்டங்கள் தேவை என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளும் இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளன.

இதுதொடர்பாக விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைனில் ஆபாச கருத்துகள், வீடியோக்களை அகற்ற, கடும் நடவடிக்கை எடுக்க தற்போதைய சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும். ஓடிடி, சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை தெரிவித்துள்ளது.

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தலைமையான நாடாளுமன்ற குழு பிப்ரவரி 25-ம் தேதி கூடுகிறது. அப்போது மத்திய தகவல், ஒலிபரப்புத் துறையின் விளக்கம் குறித்து விரிவாக ஆராயப்படும். இதற்கேற்ப நாடாளுமன்ற குழு உரிய பரிந்துரைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT