லக்னோ: உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் வரும் 26-ம் தேதி மகா கும்பமேளா நிறைவடைய உள்ளது. சில நாட்களே இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. திரிவேணி சங்கமத்தில் இதுவரை 60 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
உத்தர பிரதேசம், பிரயாஜ்ராஜில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. ஒவ்வொரு நாட்களும் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த 29-ம் தேதி மவுனி அமாவாசை நாளில் மட்டும் சுமார் 10 கோடி பேர் புனித நீராடினர். அன்றைய தினம் கூட்டநெரிசல் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது சுமார் 10 கி.மீ. தொலைவு நடந்து சென்று பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
இதுகுறித்து உத்தர பிரதேச அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மகா கும்பமேளாவை ஒட்டி பிரயாக்ராஜில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட நகரம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதற்குள் கூடார நகரம், கோபுர நகரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரே நேரத்தில் சுமார் ஒரு கோடி பேர் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பக்தர்களுக்காக 1.5 லட்சம் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுமார் 250 ஏடிஎம் குடிநீர் இயந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் 24 மணி நேரமும் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. ஒரு நாளில் 650 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. குப்பைகளை அகற்ற 10,000 துப்புரவு பணியாளர்கள், 350 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. திரிவேணி சங்கமம் பகுதி நீரை தூய்மைப்படுத்த 3 சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
வரும் 26-ம் தேதி மகா கும்பமேளா நிறைவடைதால் கடந்த சில நாட்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பிரயாக்ராஜ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாள்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மகா கும்பமேளாவின் 41-வது நாளான சனிக்கிழமை மட்டும் சுமார் 1.50 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, நடிகை தமன்னா, கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளிட்ட விவிஐபிக்களும் சனிக்கிழமை புனித நீராடினர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மகா சிவராத்திரி கொண்டாடப்படும் பிப்ரவரி 26-ம் தேதி மகா கும்பமேளா நிறைவடைகிறது. அன்றைய தினம் பிரயாக்ராஜில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால்
பல்வேறு கட்ட முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். முதல்வர் யோகி ஆதித்யநாத் மகா கும்பமேளா ஏற்பாடுகளை லக்னோவில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் நேரடியாக கண்காணித்து வருகிறார். இவ்வாறு உத்தர பிரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.