இந்தியா

காசி தமிழ் சங்கமத்தில் மொழிபெயர்ப்பு பட்டறை: பாரதியாரின் கொள்ளுப்பேத்தி பங்கேற்பு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மாநிலம் வாராணாசியில் காசி தமிழ் சங்கமம் 3.0 (கேடிஎஸ் 3.0) நடைபெறுகிறது. இதில் நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா (என்பிடி) நடத்திய மொழிபெயர்ப்புப் பட்டறையில் பாரதியாரின் கொள்ளுப்பேத்தி முனைவர்.ஜெயந்தி முரளி கலந்து கொண்டார்.

உபி.,யின் வாராணாசியில் பிப்ரவரி 15-ல் கேடிஎஸ் 3.0 துவங்கியது. இதன் துவக்க விழாவில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 24 வரை நடைபெறும் இவ்விழாவின் ஒரு பகுதியாக நேற்று, என்பிடியால் மொழிபெயர்ப்புப் பட்டறை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் முனைவர்.ஜெயந்தி முரளி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

வாராணாசிவாசியான இவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் சகோதரியின் கொள்ளுப்பேத்தி ஆவார். இம்மொழிபெயர்ப்புப் பட்டறையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களால் 24 இந்தி சிறுவர் இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.

மொழிபெயர்ப்பாளர்கள் தாங்கள் செய்த மொழிபெயர்ப்புகளை ஆர்வத்துடன் எடுத்துரைத்துப் பின்னூட்டங்களைப் பெற்றனர். இந்த மொழிபெயர்ப்புகளை மேலும் செம்மைப்படுத்த தேவையான கருத்துக்களை முனைவர்.ஜெயந்தி முரளி வழங்கினார். கடந்த 2023 ஆம் ஆண்டின் கேடிஎஸ் 2.0 விலும் NBT-யால் மொழிபெயர்ப்புப் பட்டறை நடத்தப்பட்டது. இதில், 10 இந்தி சிறுவர் இலக்கிய நூல்கள் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன.

ஆளுநர் ஆர்.என்.ரவி: இந்நூல்கள் மூன்றாம் காசி தமிழ் சங்கமத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சஞ்சய் குமார் ஆகியோர் இந்த மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டனர்.

SCROLL FOR NEXT