இந்தியா

வன உயிர்கள் பாதுகாப்புக்கு தொடர்ந்து பாடுபடும் அசாமின் பூர்ணிமா தேவிக்கு 'டைம்' இதழ் பாராட்டு

செய்திப்பிரிவு

வன உயிர்கள் பாதுகாப்பில் தலைசிறந்த பங்களிப்புக்காக 'டைம்' இதழின் 2025-ம் ஆண்டுக்கான சிறந்த பெண்கள் பட்டியலில் அசாமை சேர்ந்த வனவிலங்கு உயிரியலாளர் பூர்ணிமா தேவி பர்மன் இடம் பிடித்துள்ளார்.

மொத்தம் 13 பேரை கொண்ட இந்த கவுரவமிக்க பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியப் பெண்மணி பூர்ணிமா தேவி ஆவார்.

அசாமின் காம்ரூப் பகுதியில் பிறந்த பூர்ணிமா தேவி குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இவர் கடந்த 2007-ல் முனைவர் பட்டத்துக்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது நாரை கூட்டை ஒருவர் வெட்டுவதை கண்டார். நாரையின் தோற்றம் மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக அதனை உள்ளூர் மக்கள் வெறுப்பதை உணர்ந்தார்.

இதையடுத்து முனைவர் படிப்பை சில காலம் நிறுத்தி வைத்த அவர், அப்பறவையின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து உள்ளூர் மக்களுக்கு கற்பிக்க தொடங்கினார். நாரையின் பாதுகாப்புக்காக சுமார் 10 ஆயிரம் பெண்களை கொண்ட 'ஹர்கிலா ஆர்மி' என்ற அமைப்பை உருவாக்கினார். இதன்மூலம் அருகி வரும் அந்தப் பறவையினத்தை மீட்டெடுத்தார்.

பெண்களை அதிகாரம் பெறச் செய்யவும் பல்வேறு முயற்சிகளையும் இவர் மேற்கொண்டுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பல்வேறு பிரச்சாரங்களை முன்னின்று நடத்தியுள்ள இவர், சூழலியல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு திட்டங்கள் மற்றும் அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.

2017-ல் இந்தியப் பெண்களுக்கான மிக உயர்ந்த சிவிலியன் விருதான 'நாரி சக்தி புரஸ்கார்' விருது இவருக்கு வழங்கப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இவ்விருதை வழங்கினார். அதே ஆண்டில் கிரீன் ஆஸ்கார் என்று அழைக்கப்படும் விட்லி விருதையும் இவர் பெற்றார்.

SCROLL FOR NEXT