இந்தியா

பிரயாக்ராஜ் | கும்பமேளாவுக்கு சென்ற பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 10 பக்தர்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவுக்குச் செல்லும் வழியில், மிர்சாபூர் - பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் பேருந்து மற்றும் கார் மோதிக்கொண்ட விபத்தில் சத்தீஸ்கரைச் சேர்ந்த 10 பக்தர்கள் உயிரிழந்தனர். நள்ளிரவு ஏற்பட்ட இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்தனர்.

விபத்தில் உயிரிழந்த பக்தர்கள் சத்தீஸ்கர் மாநிலம் கோப்ராவைச் சேர்ந்தவர்கள். அந்தப் பேருந்தும் மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர்க்கில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு வந்ததாகு.

விபத்து குறித்து பிரயாக்ராஜ் கூடுதல் போலீஸ் எஸ்.பி. விவேக் சந்த்ர யாதவ் கூறுகையில், “சத்தீஸ்கரில் இருந்து பக்தர்களை ஏற்றிக் கொண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்கு வந்த கார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து மிர்சாபூர் - பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் நள்ளிரவில் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக ஸ்வரூப் ராணி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.” என்றார்

கும்பமேளாவுக்குச் சென்றவர்கள் சாலை விபத்தில் சிக்கியது குறித்து அறிந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதேபோல் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

கும்பமேளா சம்மந்தப்பட்ட முந்தைய விபத்துகள்: கும்பமேளாவுக்கு செல்லும் பக்தர்கள் விபத்துக்குள்ளாவது இது முதல் சம்பவம் இல்லை. செவ்வாய்க்கிழமை, மத்தியப் பிரதேசத்தின் ஜபால்பூர் மாட்டத்தில் டெம்போ டிராவலருடன் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், கும்பமேளா சென்று திரும்பிய ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 7 பயணிகள் உயிரிழந்தனர்.

திங்கள்கிழமை கும்பமேளாவுக்குச் சென்று காரில் திரும்பிக் கொண்டிருந்த கார் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஆக்ராவைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக கூடுகையான மகா கும்பமேளா நிகழ்வு ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 26-ம் தேதி நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT