கேரளாவின் பசுமை மனிதர் என அழைக்கப்பட்ட கல்லுர் பாலன் (75) காலமானார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்லுர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் என்ற ஏ.வி.பாலகிருஷ்ணன் (75). பள்ளிப் படிப்பை முடித்த பிறகு தனது குடும்ப தொழிலான கள் இறக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் சமூக சீர்திருத்தவாதி நாராயண குருவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அந்த தொழிலை விட்டுவிட்டு சிறு சிறு வேலைகளை செய்தார்.
அதன் பிறகு பல்லுயிர் பாதுகாப்புக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். இதில் பறவைகள், வன விலங்குகளுக்கு உணவளித்தல் மற்றும் பாலக்காடு மாவட்டத்தில் தரிசாக இருந்த மலைப்பகுதியில் மரங்களை வளர்த்தது ஆகியவை அடங்கும்.
பாலன் 2000-வது ஆண்டில் பல்லுயிர் பாதுகாப்புப் பணியைத் தொடங்கினார். பச்சை உடைகளை மட்டும் அணிந்திருந்த அவர் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்துள்ளார். கேரள அரசின் வனத் துறை இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் 2011-ம் ஆண்டு வனமித்ரா (காடுகளின் நண்பன்) விருதை வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பாலனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் இதய கோளாறு காரணமாக ஏற்கெனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடலுக்கு நேற்று இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.