இந்தியா

டெல்லியில் 3-வது முறை காங்கிரஸுக்கு பூஜ்ஜியம்!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 3-வது முறையாக காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சட்டப்பேரவையுடன்கூடிய யூனியன் பிரதேசமாக டெல்லிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதன்படி கடந்த 1952-ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைக்கு முதல்முறையாக தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கடந்த 1956-ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை கலைக்கப்பட்டது.

இதன்பிறகு கடந்த 1993-ம் ஆண்டு மீண்டும் சட்டப்பேரவையுடன்கூடிய யூனியன் பிரதேசமாக டெல்லிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மதன்லால் குரானா, சாகிப் சிங் வர்மா, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அடுத்தடுத்து முதல்வர் பதவி வகித்தனர்.

கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. 2003 மற்றும் 2008-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அந்த கட்சி வெற்றி பெற்றது. இதன்படி கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் டெல்லி முதல்வராக பதவி வகித்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2015, 2020 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் ஆம் ஆத்மி ஆட்சியை தக்க வைத்தது. தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 8 இடங்கள் கிடைத்தன. கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் அந்த கட்சிக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை. தற்போதைய டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை. 3-வது முறையாக அந்த கட்சிக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது. அதோடு கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளையே பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜக 45.89 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. ஆம் ஆத்மிக்கு 43.59 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. காங்கிரஸுக்கு 6.38 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது.

SCROLL FOR NEXT