இந்தியா

மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து

செய்திப்பிரிவு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் நேற்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. இது இம் மாதம் 26-ம் தேதி முடிவடைகிறது. இங்கு இது வரை 39 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர். கடந்த புதன் கிழமை பிரதமர் மோடி புனித நீராடினார். மகா கும்ப மேளாவுக்காக பிரயாக்ராஜில் ஏராளமான தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தங்கும் சாதுக்கள் தாங்களே உணவு சமைத்து சாப்பிடுகின்றனர். குளிர் காய்வதற்காக சிலர் தீ மூட்டுகின்றனர். இதனால் இங்குள்ள சத்நாக் படித்துறை பகுதியில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 15 கூடாரங்கள் எரிந்தன. இந்த தீ உடனடியாக அணைக்கப்பட்டது. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்நிலையில் பிரயாக்ராஜின் பழைய ஜி.டி சாலையில் துளசி சவுரகா என்ற இடத்துக்கு அருகே அமைக்கப்பட்ட முகாமில் நேற்று தீ விபத்து ஏற்பட்டு பல கூடாரங்கள் எரிந்தன. இங்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தின. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இங்கு கடந்த மாதம் 29-ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு உ.பி.அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்தது. இந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினமும் லட்சக்கணக்கானோர் மகா கும்பமேளாவில் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மகா கும்பமேளா நிறைவு பெறுகிறது.

SCROLL FOR NEXT