மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோர் டெல்லியில் நேற்று கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். படம்: பிடிஐ 
இந்தியா

மகாராஷ்டிர வாக்காளர் பட்டியலில் முரண்பாடு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சிவசேனா (யுபிடி) எம்.பி.சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோர் டெல்லியில் நேற்று கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ராகுல் கூறியதாவது:

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இங்கு உள்ளோம். அந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம். இதில் சில முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் இடைப்பட்ட 5 ஆண்டுகளில் புதிதாக 32 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர்.

ஆனால், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2024 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இடைப்பட்ட வெறும் 5 மாத காலத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக 39 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வாக்காளர்கள் யார் என்பதுதான் எங்கள் முதல் கேள்வி. இரண்டாவது, ஒட்டுமொத்தமாக வாக்களிக்க தகுதியுள்ள மக்கள் தொகையைவிட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது ஏன்? இதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் எக்ஸ் சமூக வலைதளத்தில், “அரசியல் கட்சிகளை முன்னுரிமை பங்குதாரராக தேர்தல் ஆணையம் கருதுகிறது. வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய பதில் எழுத்து மூலம் அளிக்கப்படும்” என பதிவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT