புதுடெல்லி/ ஈரோடு: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் பிற்பகலில் தெரிந்துவிடும்.
டெல்லியில் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிநடைபெறுகிறது. 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 60.42 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி, வாக்கு எண்ணிக்கை இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. காலை 8 மணி முதல் முன்னிலை நிலவரம் வெளியாகும்.
புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் பாஜக சார்பில் பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீக்ஷித் போட்டியிடுகின்றனர். கல்காஜி தொகுதியில் முதல்வர் அதிஷிக்கு எதிராக அல்காலம்பா (காங்கிரஸ்), ரமேஷ் பிதுரி (பாஜக) போட்டியிடுகின்றனர். ஜாங்புரா தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஷகுர் பஸ்தி தொகுதியில் சத்யேந்தர் ஜெயின் போட்டியிடுகின்றனர்.
டெல்லி பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 70 தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆட்சி அமைக்க 36 இடங்களில் வெற்றி பெற வேண்டும். எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என பிற்பகலில் தெரிந்துவிடும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடந்தது. இதில், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 46 பேர் போட்டியிட்டனர். 74,260 ஆண்கள், 80,376 பெண்கள், 21 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1.55 லட்சம் பேர் வாக்களித்தனர்.
67.97 சதவீத வாக்குகள் பதிவாகின. இத்துடன், தபால் வாக்குகள், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் என 246 பேரும், ராணுவத்தில் பணியாற்றும் 4 பேர், சிறை கைதி ஒருவர் என 251 வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. தபால் வாக்குஎண்ணும் பணி காலை 8 மணிக்கும், மின்னணுவாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 8.30 மணிக்கும் தொடங்கும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.