இந்தியா

பிரயாக்ராஜ் | கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து - கூடாரங்கள் எரிந்து சேதம்; காயம் இல்லை

செய்திப்பிரிவு

பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பிரயாக்ராஜில் உள்ள மகாகும்ப் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கும்பமேளா நடந்து வரும் இடத்தில் உள்ள சங்கராச்சாகியா செக்டார் 18-ல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

தீ விபத்து குறித்து ஹாக் சவுக் காவல்நிலைய ஆய்வாளர் யோகேஷ் சதுர்வேதி கூறுகையில், “பழைய ஜிடி சாலையில் உள்ள துளசி சவுராஹாவுக்கு அருகில் உள்ள ஒரு கூடாரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. என்றாலும் தீயணைப்பு வீரர்கள் போராடி பெருமளவு தீயை அணைத்து விட்டனர்" என்றார். மேலும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தீயணைப்பு பணியினை பார்வையிட சம்பவ இடத்துக்குச் சென்றனர் என்றார்.

நகர காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், “தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.” என்றார்.

தீயணைப்புத்துறை தலைமை அதிகாரி பரமோத் சர்மா கூறுகையில், “தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இஸ்கானில் இருந்து தீ உருவாகி பரவத் தொடங்கி இருக்கிறது. இந்த விபத்தில் உயிரிழப்புகளோ, காயங்களோ ஏற்படவில்லை. 20 - 22 கூடாரங்கள் எரிந்துள்ளன.” என்று தெரிவித்தார்.

முன்னதாக கடந்த மாதமும் இதேபோன்ற தீ விபத்து ஒன்று மகா கும்பமேளாவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. செக்டார் 19ல் சிலிண்டர் ஒன்று வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார், 18 கூடாரங்கள் கருகின.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஜன.13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இந்தமாதம் 26-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

SCROLL FOR NEXT