இந்தியா

தேர்தல் ஆணையம் மீது அவதூறு பரப்ப ஆம் ஆத்மி முயற்சி: தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தேர்தல் ஆணையம் மீது அவதூறு பரப்ப ஆம் ஆத்மி தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டி உள்ளது.

டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் ஆதிஷியும் பாஜக சார்பில் ரமேஷ் பிதுரியும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் ஆதிஷி தனது எக்ஸ் தளத்தில், “தேர்தல் நடத்தை விதிகளை மீறிய ரமேஷ் பிதுரியின் குடும்ப உறுப்பினர்கள் மீது காவல் துறையிலும் தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்தேன். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அவர்களே தேர்தல் நடைமுறையை மேலும் எந்த அளவுக்கு சீர்குலைப்பீர்கள்?” என பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, எங்கள் கட்சிக்கு எதிராக தேர்தல் ஆணையமும் காவல் துறையும் கூலிப்படையைப் போல செயல்படுகிறது என ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் எக்ஸ் தளத்தில், “தேர்தல் விதிமீறல் தொடர்பான அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் புகார்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 1.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம் மீது அவதூறு பரப்புவதற்காக மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே அழுத்தம் கொடுக்கும் தந்திரங்களை ஆம் ஆத்மி கட்சி மேற்கொண்டு வருகிறது” என குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT