இந்தியா

கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் உடலை தண்ணீரில் வீசியதாக கூறிய ஜெயா பச்சனை கைது செய்ய விஎச்பி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் திரிவேணி சங்கமத்தில் வீசப்பட்டதாக கூறிய சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சனை கைது செய்ய வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து விஎச்பி ஊடக பொறுப்பாளர் சரத் சர்மா கூறியதாவது: மகா கும்பமேளா என்பது பக்தி மற்றும் நம்பிக்கையின் முதுகெலும்பு. அங்குதான் இந்துக்கள் தர்மா, கர்மா, மோட்சததை அடைகின்றனர். இந்த மாபெரும் சடங்கு கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வோடு இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சமாஜ்வாதி எம்.பி. ஜெயா பச்சன், இறந்தவர்களின் உடல்கள் மகா கும்பமேளா நீரில் வீசப்பட்டதாகவும், இதனால், கும்பம் நீர்நிலைகள் மிகவும் மாசுபட்டுள்ளதாகவும் கூறிய கருத்து முற்றிலும் பொய்யானது. இதுபோன்ற உண்மைக்கு மாறான கருத்துகளை பரப்பி சமூகத்தில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி வரும் சமாஜ்வதி எம்.பி. ஜெயா பச்சனை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு சரத் சர்மா தெரிவித்தார்.

கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஜெயா பச்சன், “ மகா கும்பமேளா தண்ணீர் தற்போது மிகவும் மாசுபட்டுள்ளது. ஏனெனில், கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உடல்கள் திரிவேணி சங்கமத்தில்தான் வீசப்பட்டுள்ளது. அங்கு சாமானிய பக்தர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. அவர்களின் கவனம் முழுவதும் விஐபி-க்களை வரவேற்பதில்தான் உள்ளது. மேலும், மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதாக உத்தர பிரதேச அரசு பொய்யான தகவலை கூறி வருகிறது. அந்த குறிப்பிட்ட இடத்தில் எப்படி அவ்வளவு பேர் கூட முடியும்" என்றார். இந்த கருத்துக்குத்தான் விஎச்பி தற்போது எதிர்வினையாற்றியுள்ளது.

SCROLL FOR NEXT