புதுடெல்லி: கடந்த 10 மாதங்களாக லிபியாவில் சிக்கித் தவித்த 16 இந்தியத் தொழிலாளர்கள் நாளை (பிப்.5) இந்தியா திரும்ப உள்ளனர். அவர்கள் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
லிபிய சிமென்ட் நிறுவனத்தின் பெங்காசி ஆலையில் செப்டம்பர் 2024 முதல் சிறை போன்ற சூழ்நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக 16 இந்தியத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். நீண்ட வேலை நேரம், ஒழுங்கற்ற ஊதியம், ஒப்பந்தத்தை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களை இந்திய தொழிலாளர்கள் முன்வைத்தனர். இந்த தொழிலாளர்கள், உத்தரப் பிரதேசம் மற்றும் பிஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
16 தொழிலாளர்களில் ஒருவரான உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த மிதிலேஷ் விஸ்வகர்மா, "துபாயைச் சேர்ந்த ‘ஒப்பந்தக்காரர்’ அபு பக்கர் என்பவர், இந்தியாவிலிருந்து துபாய் வழியாக நாங்கள் லிபியா வர உதவினார். கடந்த ஆண்டு செப்டம்பரில், சம்பளம் கடுமையாகக் குறைக்கப்பட்டதை அடுத்து பிரச்சினை தொடங்கியது. மேலும், வேலைக்குச் சேர்ந்தபோது எட்டரை மணிநேரம் என்று நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் அதிகரிக்கத் தொடங்கியது. நான்கு மாதங்களுக்கு முன்பு அது இரட்டிப்பாகியது. அதோடு, நள்ளிரவுக்குப் பிறகு திட்டமிடப்படாத ஷிப்டுகளில் வேலை செய்ய ஊழியர்களை அழைத்தனர்.
ஊதியம் மற்றும் வேலை நேரம் தொடர்பாக கேட்டபோது மோதல் ஏற்பட்டது. துபாயிலிருந்து விமானத்தில் வந்த ஒப்பந்ததாரர், எங்களில் இருவரை அடித்து, வேலை செய்ய கட்டாயப்படுத்தினார்" என ‘தி இந்து’ ஆங்கிலம் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
இந்திய தொழிலாளர்களின் நிலையை அறிந்து இந்திய தூதரகம் அவர்களுக்கு உதவிகளைச் செய்தது. இதையடுத்து, தொழிலாளர்களின் பாஸ்போர்ட் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அவர்கள் லிபியாவில் இருந்து தாயகம் திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டன. இன்று (செவ்வாய்) விமானம் மூலம் புறப்படும் இந்திய தொழிலாளர்கள், நாளை காலை நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.