இந்தியா

“ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மோடியால் மட்டுமே..” - கவனம் பெறும் அமித் ஷாவின் ட்வீட்!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: “ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மோடியால் மட்டுமே டெல்லியில் உள்ள கிராமப்புற மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள 360 கிராமங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததோடு அந்த சந்திப்பு தொடர்பாக சமூகவலைதளத்தில் தனது கருத்தினை அமித் ஷா இவ்வாறாகப் பகிர்ந்துள்ளது. அவரது இந்த ட்வீட் கவனம் பெற்று வெகுவாக விமர்சனங்களை ஈர்த்து வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் உள்ள 360 கிராமங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “டெல்லியில் உள்ள 360 கிராமங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தேன். அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியில் உள்ள கிராமப்புற மக்களை பொய் சொல்லி ஏமாற்றுகிறார்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மோடியால் மட்டுமே டெல்லியில் உள்ள கிராமப்புற மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஆம் ஆத்மியால் பாதிக்கப்பட்ட 360 கிராமங்கள் மற்றும் 36 சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பாஜகவுக்கு முழு ஆதரவையும் அளித்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் ஆணையத்துக்கு இன்று (பிப்.2) கடிதம் எழுதினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், “பாஜகவினர் வெற்றிக்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது, அதனால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி வரலாற்று வெற்றியை நோக்கி பயணத்தி வருகிறது.” என்று கூறியிருந்தார்.

இதனிடையே ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் இதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சனிக்கிழமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் புதுடெல்லி தொகுதியில் பாஜக தொண்டர்கள் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களை தாக்கி அவர்களைப் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்தனர் என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

SCROLL FOR NEXT