புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி டெல்லி குடிசைவாசிகளுக்கு ரூ.3000 கொடுத்து, தேர்தல் ஆணையத்தின் மூலம் வீட்டிலேயே வாக்களிக்க வசதி செய்வதாக உறுதியளித்து தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், “இன்று டெல்லியின் குடிசைப்பகுதியில் வசிக்கும் பலரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்தக் கட்சி (பாஜக) அங்கு வீடு வீடாகச் சென்று அங்கு வசிக்கும் மக்களிடம் ரூ.3000 பெற்றுக்கொள்ளுங்கள், தேர்தல் ஆணையம் வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதி செய்யும் என்று கூறியிருக்கிறார்கள். இதனைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். இது உங்களை சிக்க வைக்கும் ஒரு சதி.” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து டெல்லி வாக்காளர்களை எச்சரித்த கேஜ்ரிவால், “இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதில் இருந்து என்னால் தூங்க முடியவில்லை. இந்த சதி வலையில் மக்கள் சிக்க வேண்டாம். உங்களுடைய மூத்த சகோதரனாக, அவர்களுடைய சதி வலையில் சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறேன். அவர்களுக்கு வாக்களித்து விரல்களில் மை பூசிக்கொண்டால், உங்ககளுக்கு எதிராக வழங்குப் பதிந்து உங்களை அவர்கள் கைதும் செய்வார்கள்.
அவர்கள் இலவசமாக பணம் கொடுத்தால் அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். ஒருவேளை தப்பித் தவறி பாஜக அரசு ஆட்சிக்கு வந்துவிட்டால், அவர்கள் குடிசைகளை எல்லாம் அப்புறப்படுத்தி விடுவார்கள். மும்பையில் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியை அவர்களின் நண்பர்களில் ஒருவருக்கு வழங்கியிருக்கிறார்கள்.” என்று கூறினார்.