இந்தியா

‘குடிசைகள் இடிக்கப்படாது; நலத்திட்டங்கள் நிறுத்தப்படாது’ - ஆம் ஆத்மிக்கு பிரதமர் பதிலடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இங்குள்ள குடிசை பகுதிகள் இடிக்கப்படாது, எந்த நலத்திட்ட உதவிகளும் நிறுத்தப்படாது என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். டெல்லியில் உள்ள குடிசைப்பகுதிகளை பாஜக குறிவைத்துள்ளது, அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் குடிசைகள் அழிக்கப்படும், நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என்ற ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லியின் ஆர்.கே.புரத்தில் நடந்த பிரச்சார பேரணி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி," பாஜக ஆட்சிக்கு வந்தால் தேசியத் தலைநகரில் உள்ள குடிசைவாசிகளுக்கு ரூ.5-க்கு சத்தான உணவு வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். அதேபோல் ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் அவர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கு காப்பீடு திட்டம் வழங்கப்படும். அவர்களுடைய குழந்தைகளின் பள்ளி கல்வி கட்டணத்துக்கும் பாஜக அரசு உதவிகள் செய்திடும்.

நான் உங்களுக்கு இன்னுமொரு உத்தரவாதமும் தருகிறேன். அந்த பேரழிவுக்கார்கள் கூறுவதுபோல, பாஜக ஆட்சியில் டெல்லியில் உள்ள எந்த ஒரு குடிசையும் இடிக்கப்படாது. டெல்லி மக்களுக்கான எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் நிறுத்தப்படாது.

பூர்வாஞ்சல் மக்கள்தான் என்னை நாடாளுமன்ற உறுப்பினராக்கி, பிரதமாராக்கினார்கள். பூர்வாஞ்சல் மக்கள் டெல்லியில் பணி புரிகிறார்கள். டெல்லியின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறார்கள். ஆனால் கரோனா வந்தபோது, இந்த ஆம் ஆத்மி கட்சியினர் தவறான தகவல்களைப் பரப்பி, அச்சுறுத்தி டெல்லியை விட்டே வெளியேற்றினார்கள்.

பிஹாருக்கான பட்ஜெட் அறிவிப்புகளை பார்த்த பின்பு இந்த ஆம் ஆத்மி தலைவர்கள் கவலையில் உள்ளனர். அவர்கள் எதிர்மறை அரசியல் செய்யட்டும். பாஜக தொடர்ந்து பூர்வாஞ்சல் மக்களுக்கு உதவும்" இவ்வாறு பிரதமர் பேசினார்.

முன்னதாக, ஜனவரி 12-ம் தேதி பிரச்சாரத்தில் பேசிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், “டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இங்குள்ள குடிசைகள் எல்லாம் இடிக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் வீடில்லாதவர்களாக மாற்றப்படுவார்கள்.” என்று தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT