இந்திய கடற்படையில் அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க் கப்பல் சேர்க்கப்பட உள்ளது.
ஆகஸ்ட் 16-ம் தேதி மும்பை கடற்படைத் தளத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இந்த போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்திய கடற்படையின் பலத்தை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் மிகப் பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கடற்படையில் சேர்க்கப்பட்டது.
தற்போது சுமார் 15 ஆயிரம் கி.மீட்டர் தொலைவுக்கு ரோந்து பணிகளை மேற்கொள்ளும் திறன் படைத்த ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பல் கடற்படையில் புதிதாக இணைய உள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணை
6800 டன் எடை கொண்ட இந்த போர்க்கப்பலில், நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் திறன், போர்க்கப்பல்களை அழிக்கும் திறன்வாய்ந்த ஏவுகணைகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
மேலும் கடலில் இருந்து தரை இலக்கை தாக்கும் ஏவுகணைகள், போர்க்கப்பல்களை குறிதவறாமல் தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை களும் கப்பலில் பொருத்தப்ப ட்டுள்ளன.
இதர போர்க் கப்பல்களின் உதவியின்றி ஐ.என்.எஸ். கொல் கத்தாவால் தனித்து இயங்க முடியும். இதில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக ஹெலி பேடும் உள்ளது.
இந்த போர்க்கப்பலையும் சேர்த்து இந்திய கடற்படையில் போர்க் கப்பல்களின் மொத்த எண்ணிக்கை 140-ஐ எட்டியுள்ளது.
பல ஆண்டு காலமாக இந்திய கடற்படைக்கு ரஷ்யாவிடம் இருந்துதான் போர்க்கப்பல்கள் வாங்கப்பட்டு வந்தன. கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டிலேயே போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க் கப்பல் மும்பை கப்பல் கட்டுமான தளத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.