இந்தியா

பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்: பட்ஜெட் குறித்து மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் கருத்து

செய்திப்பிரிவு

நாட்டின் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து வர்த்தக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்தினை பகிர்ந்துள்ளார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா: பிரதமர் மோடியின் இதயத்தில் எப்போதும் நடுத்தர வர்க்கத்தினர்தான் உள்ளனர். ரூ.12 லட்சம் வருமானம் வரை வருமான வரி இல்லை. இந்த வரி விலக்கு நடுத்தர வர்க்கத்தினரின் நிதி நல்வாழ்வை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும். இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் எனது வாழ்த்துகள்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்: தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது துணிச்சலான நடவடிக்கை. நடுத்தர வர்க்கத்தினருக்கான கனவு பட்ஜெட் இது. வளர்ந்த இந்தியா இலக்கை மனதில்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் அனைவரின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி: புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுவோர் இனி வரி கட்டத் தேவையில்லை. மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த முயற்சிக்காக பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு மனமார்ந்த நன்றி. தொலைநோக்கு பார்வை கொண்ட இந்த நடவடிக்கை மக்களை அதிகாரம் பெறச் செய்யும், பொருளாதாரத்தை வலுப்படுத்தும். அனைவருக்கும் புதிய பிரகாசமான நிதி வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான்: பிஹாரில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் நிறுவப்பட உள்ளது. இது கிழக்கு பிராந்தியம் முழுவதும் உணவு பதப்படுத்தும் தொழிலை வலுப்படுத்தும். வேளாண் விளைபொருட்களின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.

SCROLL FOR NEXT