இந்தியா

துப்பாக்கி குண்டு காயங்களுக்கு சிறு கட்டு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: துப்பாக்கி குண்டு காயங்களுக்கு சிறு கட்டு போடுவது போல் மத்திய பட்ஜெட் உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி காந்தி தனது எக்ஸ் பதிவில், “துப்பாக்கி ராகுல் தோட்டா காயங்கங்களுக்கு சிறு கட்டு போடுவது போல் மத்திய பட்ஜெட் உள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், நமது பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு ஒரு முன்னுதாரண மாற்றம் தேவைப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் யோசனைகள் இல்லாமல் திவாலாகி விட்டது” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில், “கடந்த 10 ஆண்டுகளில், நரேந்திர மோடி அரசு நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து ரூ.54.18 லட்சம் கோடி வருமான வரியை வசூலித்துள்ளது. இப்போது ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.80,000 சேமிக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால் இது ஒரு மாதத்திற்கு ரூ.6,666 மட்டுமே.

நாடு முழுவதும் பணவீக்கம் மற்றும் வேலையின்மை பிரச்சினையால் போராடி வருகிறது . ஆனால் மோடி அரசாங்கம் தவறான பாராட்டுகளைப் பெறுவதில் குறியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில், “வேளாண்மை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், முதலீடு, ஏற்றுமதி என நான்கும் வளர்ச்சிக்கான இன்ஜின்கள் என்று நிதியமைச்சர் கூறுகிறார்.

ஆனால் பல இன்ஜின்கள் இருப்பதால் பட்ஜெட் முற்றிலும் தடம்புரண்டு விட்டது. 2010-ல் இயற்றப்பட்ட அணுசக்தி விபத்துக்கான சிவில் பொறுப்பு சட்டத்தை அருண் ஜேட்லி தலைமையிலான பாஜக வெற்றிகரமாக நாசமாக்கியது. தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பை திருப்திப்படுத்த அந்த சட்டம் திருத்தப்படும் என்று நிதியமைச்சர் அறிவிக்கிறார்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT