அரசு அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பது மற்றும் நிர்வாக சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.434 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டு முதல் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய அதிகாரிகளுக்கு உட்கட்டமைப்பு தொடர்பான தேவையான பயிற்சிகளை அளிக்க மத்திய பணியாளர் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.334 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, நிர்வாக சீர்திருத்தங்களை செய்வதற்காகவும் இந்த பட்ஜெட்டில் ரூ.100 கோடி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலங்களை நவீனமயமாக்குதல், மின் -ஆளுமையை மேம்படுத்துதல், நல்ல நிர்வாகத்தை ஊக்குவித்தல், பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கான விரிவான கட்டமைப்பு உருவாக்குதல் போன்ற பணிகளும் இந்த திட்டத்தில் அடங்கும்.
மத்திய அரசுப் பணிகளுக்கான பல்வேறு ஆட்சேர்ப்புத் தேர்வுகளை நடத்தும் பணியாளர் தேர்வாணையத்திற்கு (எஸ்எஸ்சி), 2025-26-ம் ஆண்டிற்கு ரூ.515.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு 2024-25 நிதியாண்டில் இதற்கான ஒதுக்கீடு ரூ.584.92 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.