இந்தியா

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு: மத்திய பட்ஜெட் 2025-ல் முக்கிய அறிவிப்புகள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவையில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இதில், புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையின் கீழ் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மாத சம்பளதாரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மக்களவையில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பட்ஜெட் உரையில் பல்வேறு திட்டங்கள். அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியதாவது:

கடந்த 2019-ம் ஆண்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. கடந்த 2023-ல் ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாத சம்பளம் பெறுவோருக்கான நிலையான கழிவு கடந்த பட்ஜெட்டில் ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன்படி மாத சம்பளம் பெறுவோர் ரூ.12.75 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வருமான வரி செலுத்த தேவையில்லை. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார் பட்ஜெட் உரையில் பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார்.

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால், மாத சம்பளதாரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பழைய வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய விகிதத்தில் ரூ.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு வருமான வரி செலுத்த தேவையில்லை. அந்த வரி விகிதம் அப்படியே தொடர்கிறது.

ஏழை, நடுத்தர மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விவசாயிகளின் கிசான் கிரெடிட் அட்டை கடன் வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வேளாண் சாகுபடியில் பின்தங்கிய நிலையில் உள்ள 100 மாவட்டங்களில் ‘தன தானிய’ வேளாண் திட்டம் தொடங்கப்படும். கால்நடை வளர்ப்போர், மீன் உற்பத்தி செய்வோருக்கு ரூ.5 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். மீன் உற்பத்தி மீதான கலால் வரி 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும் என்பது உட்பட விவசாயிகள் நலன் தொடர்பாக 11 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொடங்க ரூ.10,000 கோடியில் நிதியம் ஏற்படுத்தப்படும். ரூ.500 கோடியில் 3 செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மையங்கள் அமைக்கப்படும். 5 தேசிய திறன்சார் மையங்கள் அமைக்கப்படும். 5 ஆண்டுகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் கூடுதலாக 75,000 இடங்கள் சேர்க்கப்படும். 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் புதிதாக 6,500 இடங்கள் சேர்க்கப்படும்.

பிஎம் ஆராய்ச்சி உதவி திட்டத்தின்கீழ் ரூ.10,000 நிதி உதவி வழங்கப்படும். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம், ‘உலகத்துக்காக தயாரிப்போம்’ திட்டம் மேம்படுத்தப்படும் என்பது உட்பட இளைஞர்கள் நலனுக்காக 11 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறு, சிறு தொழில்களுக்கான கடன் வரம்பு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப்படும். 2-ம் நிலை நகரங்களில் வணிக மையங்கள் உருவாக்கப்படும். பொம்மை உற்பத்தியை மேம்படுத்த தேசிய அளவில் புதிய திட்டம் அமல் படுத்தப்படும். தோல் உற்பத்தி, தயாரிப்பு துறையில் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். நடைபாதை வியாபாரிகளுக்கான கடன் உதவி ரூ.30,000 ஆக அதிகரிக்கப்படும் என்பது உட்பட வியாபாரிகளுக்காக 10 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பட்டியலின, பழங்குடியினத்தை சேர்ந்த குறு, சிறு பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு கடன் உதவி திட்டம் செயல்படுத்தப்படும். முதல் தலைமுறை பெண் தொழில் முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடன் உதவி வழங்கப்படும் என்பது உட்பட மகளிர் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு துறைக்கு ரூ.6.81 லட்சம் கோடி, ரயில்வே துறைக்கு ரூ.2.55 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

'டெலிவரி ஊழியர்கள் 1 கோடி பேருக்கு மருத்துவ காப்பீடு அளிக்கப்படும். உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி சலுகை உள்ளிட்ட காரணங்களால் மின் வாகனங்கள். செல்போன், சார்ஜர், புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்டவற்றின் விலை குறையும். பின்னலாடை ஜவுளிகள், பிளாஸ்டிக் பொருட்கள் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT