மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இதில் வரும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
இரு அவைகளின் கூட்டுக்கூட்டமாக நடைபெற்ற இந்தத் தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். கடந்த ஓராண்டில் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்தும், மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள், நிறைவடைந்த திட்டங்கள் குறித்தும் சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசினார்.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யவுள்ளார்.
முன்னதாக நேற்று, மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிதியாண்டின் முதல் பாதியில் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்ப்பட்டதை தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் நேற்று பிற்பகல் பொருளாதார அறிக்கை சமர்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
8-ஆவது முறை: இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தாக்கல் செய்யவுள்ளார். இது, அவர் தொடர்ந்து 8-வது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆகும்.