இந்தியா

மூன்று கவுன்சிலர்கள் கட்சி மாறி வாக்கு: சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி

செய்திப்பிரிவு

சண்டிகர் மேயர் தேர்தலில் 3 கவுன்சிலர்கள் கட்சி மாறி வாக்களித்ததை தொடர்ந்து மாநகராட்சியின் புதிய மேயராக பாஜக வேட்பாளர் ஹர்பிரீத் கவுர் பாப்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், ஆம் ஆத்மி வேட்பாளர் பிரேம் லதாவை 2 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மொத்தம் 35 உறுப்பினர்களை கொண்ட சண்டிகர் மாநகராட்சியில் பாஜகவுக்கு 16 கவுன்சிலர்கள் உள்ளனர்.

ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி முறையே 13 மற்றும் 6 கவுன்சிலர்களுடன் பெரும்பான்மை பெற்றுள்ளது. மேலும் மாநகராட்சியின் அலுவல்ரீதியான உறுப்பினர் என்ற அடிப்படையில் சண்டிகர் காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரிக்கும் மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது.

சண்டிகர் மாநகராட்சி 5 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது, ஆனால் மேயர் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த ஆண்டு மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹர்பிரீத் கவுர் பாப்லா 19 வாக்குகள் பெற்று வெற்றி வெற்றாார். ஆம் ஆத்மி வேட்பாளர் பிரேம் லதா 17 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். 3 கவுன்சிலர்கள் கட்சி மாறி வாக்களித்ததை தொடர்ந்து ஹர்பிரீத் பாப்லா வெற்றி பெற்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி தனது எக்ஸ் பதிவில், “இந்த வெற்றிக்கு பின்னால் குதிரை பேரம் நடந்துள்ளது. சண்டிகர் மக்கள் அரசியல் ஒழுக்கக்கேட்டை கடுமையாக எதிர்க்கிறார்கள் என்பது இன்னும் இவர்களுக்கு புரியவில்லை” என்று கூறியுள்ளார்.

கட்சி மாறி வாக்களித்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சண்டிகர் காங்கிரஸ் தலைவர் எச்.எஸ்.லக்கி எச்சரித்துள்ளார்.

சண்டிகர் பாஜக தலைவர் ஜதீந்தர் பால் மல்கோத்ரா கூறுகையில், “பாஜகவால் மட்டுமே நகரில் வளர்ச்சியை கொண்டுவர முடியும் என்று எங்களுக்கு வாக்களித்த அனைவரும் அறிந்துள்ளனர்" என்றார்.

மேயர் தேர்தலை தொடர்ந்து மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜஸ்பீர் சிங் பன்டி, தருனா மேத்தா ஆகிய இருவரும் தலா 19 வாக்குகள் பெற்று வெற்றி வெற்றினர். பாஜக வேட்பாளர்கள் 17 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தனர்.

கடந்த ஆண்டு சண்டிகர் மேயர் தேர்தலில் உச்ச நீதிமன்றம் தலையிட்டதை தொடர்ந்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இந்த ஆண்டு மேயர் தேர்தல் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயஸ்ரீ தாக்கூர் மேற்பார்வையிட்டார்.

SCROLL FOR NEXT