ஆந்திர மாநிலத்தில் நேற்று முதல் வாட்ஸ்அப் அரசாட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பொது மக்கள் பிறப்பு, இறப்பு உட்பட அனைத்து அரசு சான்றிதழ்களையும் வாட்ஸ் ஆப் வாயிலாகவே விண்ணப்பித்து பெற முடியும். இந்த சேவையை அமைச்சர் லோகேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
தகவல் தொழில்நுட்பத்தை உடனுக்குடன் பயன்படுத்தி வருபவர் சந்திரபாபு. தற்போது செல்போன் பயன்பாடு எங்கும் பரவியுள்ளது. அதிலும் வாட்ஸ்அப் செயலியை உபயோகப்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டுதான் வாட்ஸ்அப் ஆட்சியை சந்திரபாபு நாயுடு தற்போது கொண்டு வந்துள்ளார். இந்த சேவை நேற்று முதல் ஆந்திராவில் அமல் படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் லோகேஷ் இதனை தொடங்கி வைத்து பேசியதாவது: வாட்ஸ்அப் அரசாட்சியை அமல்படுத்தி உள்ளோம். இது மற்றுமொரு புரட்சியாகும். இதற்காக ஆந்திர அரசு 95523 00009 என்கிற எண்ணை மக்களுக்கு வழங்குகிறது. இந்த எண்ணை அனைவரும் அவரவர் செல்போன்களில் பதிவு செய்து வைத்து கொள்ளுங்கள்.
பின்னர், பிறப்பு, இறப்பு, வருவாய், ஜாதி சான்றிதழ் உட்பட பல சான்றிதழ்களை இனி நீங்கள் வாட்ஸ்அப் மூலமாகவே விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
இனி சான்றிதழ் பெற நாள் கணக்கில் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. இதேபோல் ரேஷன் அட்டைக்காகவும், வீட்டின் முகவரியை மாற்றவும், வீட்டில் உள்ளவர்களின் பெயர்களை இணைக்கவும் நாம் இந்த வாட்ஸ்அப் எண்ணை பயன் படுத்தலாம்.
மேலும், வீட்டு மனைப்பட்டா, இலவச வீட்டு திட்டம், மருத்துவம் போன்ற அனைத்திற்கும் இதனை மக்கள் பயன் படுத்தலாம். இதில் 80 சதவீத சேவைகள் சில நிமிடங்களிலேயே செய்து கொடுக்கப்படும்.
அடுத்த கட்டமாக திருப்பதி தேவஸ்தான தரிசன டிக்கெட்டுகள் கூட இதன் வழியே வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும். படிப்படியாக 520 சேவைகள் வாட்ஸ்அப் மூலம் மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
மாணவ, மாணவியர் தங்களின் ஹால் டிக்கெட் கூட இந்த வாட்ஸ் ஆப் செயலி மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம். இனி அனைத்து பள்ளி, கல்லூரி சான்றிதழ்களுக்கும் க்யூஆர் கோடு அமைக்கப்படும். அதனை ஸ்கேன் செய்தாலே போதுமானது. இது உண்மையான சான்றிதழா அல்லது போலி யானதா என்பதை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு லோகஷ் பேசினார்.