மகா கும்பமேளாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 1954-ம் ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 800 பக்தர்கள் உயிரிழந்தனர். கடந்த 1986-ம் ஆண்டு ஹரித்வார் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 200 பேர் உயிரிழந்தனர். கடந்த 2003-ம் ஆண்டு நாசிக் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். தற்போது பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்து உள்ளனர்.
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். கூட்ட நெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது தொடர்பான வழிகாட்டு நெறிகளை கண்டிப்புடன் அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். தற்போதைய உயிரிழப்புகளுக்கு காரணமான உத்தர பிரதேச அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மகா கும்பமேளாவில் குவிந்துள்ளனர். அவர்களின் வசதிக்காக அனைத்து மாநில அரசுகளும் பிரயாக்ராஜில் சிறப்பு மையங்களை அமைக்க வேண்டும். அவரவர் மாநிலங்களை சேர்ந்த பக்தர்களுக்கு சிறப்பு மையங்கள் வாயிலாக உரிய ஆலோசனைகளை வேண்டும்.
பிரயாஜ்ராஜில் அனைத்து மொழிகளிலும் அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும். போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். விஐபி கலாச்சாரத்தால் சாமானிய பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.
கடந்த 29-ம் தேதி பிரயாக்ராஜில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கான காரணங்கள் குறித்து உத்தர பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டு உள்ளது.