இந்தியா

பாலியல் வன்கொடுமை வழக்கில் உத்தர பிரதேச காங்கிரஸ் எம்.பி. கைது

செய்திப்பிரிவு

உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரத்தோர், பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் உத்தர பிரதேச காங்கிரஸின் பொதுச் செயலராகவும் உள்ளார்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியும், அரசியல் ஆசை காட்டியும் கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்ததாக சீதாபூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரத்தோருக்கு எதிராக ஜனவரி 17-ம் தேதி பெண் ஒருவர் புகார் அளித்தார்.

ஒரு வாரத்துக்கு பிறகு, அந்த பெண்ணின் கணவரும் தனியாக புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னையும், தனது குடும்பத்தினரையும் வழக்கை வாபஸ் வாங்க சொல்லி காங்கிரஸ் எம்.பி. ரத்தோரும், அவரது மகனும் மிரட்டல் விடுப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், ராகேஷ் ரத்தோர் பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, முன்ஜாமீன் கோரி ராகேஷ் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ அமர்வு தள்ளுபடி செய்ததுடன் அவரை சரணடையும்படி கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில்தான் நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT