இந்தியா

முத்தலாக் கூறியதாக பதிவான வழக்குகளின் விவரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

செய்திப்பிரிவு

முத்தலாக் கூறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நமது நாட்டில் முஸ்லிம் ஆண்கள், தங்களது மனைவிகளை முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் வழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தச் சட்டத்தை எதிர்த்து கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த சமஸ்தா கேரளா ஜமாய்த்துல் உலேமா என்ற அமைப்பு உள்ளிட்ட 12 பேரின் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், “முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை ஆண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, எத்தனை வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்களை பிரமாணப் பத்திரமாக மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்குகளின் மீதான இறுதி கட்ட விசாரணை வரும் மார்ச் 17-ம் தேதி தொடங்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT