உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மவுனி அமாவாசையை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் புனித நீராட முண்டியத்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு உத்தர பிரதேச அரசின் தவறான நிர்வாகமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “மவுனி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என தெரிந்திருந்தும் உ.பி. அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. விஐபி கலாச்சாரத்தின் விளைவால் ஏற்பட்ட துயரம் இது. இதுபோன்ற சம்பவம் இனி நடக்க கூடாது. சாமானிய பக்தர்களின் தேவையை ஈடுசெய்ய சிறந்த ஏற்பாடுகளை மாநில நிர்வாகம் முன்னெடுக்க வேண்டும். மகா கும்பமேளாவில் பலர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், காயமைடந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்றார்.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, ” மகா கும்பமேளாவில் நிர்வாக குளறுபடிகளின் காரணமா
கவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்தோருக்கு விரைவான உயரிய சிகிச்சை வழங்குவதுடன், இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‘‘மகா கும்பமேளாவில் அரைகுறையான ஏற்பாடுகள், விஐபி-க்களுக்கு அதிக முக்கியத்துவம். நிர்வாகத்தை விட சுயவிளம்பரத்தில் மாநில அரசு அதிக கவனம் செலுத்தியது போன்றவை இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகி விட்டது. பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தும் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது கண்டிக்கத்தக்கது” என்றார்.