கோப்புப்படம் 
இந்தியா

சயீப் அலிகான் தாக்குதல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

செய்திப்பிரிவு

மும்பை: பாலிவுட் நடிகர் சயீப் அலி கானை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட 30 வயதான வங்கதேசத்தைச் சேர்ந்தவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரின் போலீஸ் காவலை நீட்டிக்க புதிய காரணங்கள் எதுவும் இல்லாததால் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டது.

சயீப் அலி கான் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த முகம்மது ஷரிஃபுல் இஸ்லாம் என்பவரின் போலீஸ் காவல் புதன்கிழமை நிறைவடைந்த நிலையில் போலீஸார் அவரை பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, ஷரிஃபுல்லிடம் கூடுதல் விசாரணைக்காக அவரின் போலீஸ் காவலை இரண்டு நாட்கள் நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர்.

அப்போது நீதிபதி, “குற்றஞ்சாட்டப்பட்டவர் ஏற்கனவே 10 நாட்களுக்கும் மேலாக போலீஸ் காவலில் இருந்துள்ளார். விசாரணை நிறைவடைந்து விட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. போலீஸ் காவலை நீட்டிப்பதற்கான புதிய காரணங்கள் எதையும் இந்த நீதிமன்றம் பார்க்கவில்லை. புதிதாக ஏதேனும் தெரியவந்தால், அனுமதிக்கப்பட்ட காலத்துக்குள் போலீஸார் அவரை புதிதாக காவலில் எடுக்கலாம்.” என்று தெரிவித்தார். மேலும் ஷரிஃபுல்லை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதி​யில் உள்ள அடுக்​கு​மாடி கட்டிடத்​தின் 11-வது தளத்​தில் உள்ள வீட்டில் ஜன.16-ம் தேதி அதிகாலை நுழைந்த மர்ம நபர் பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை 6 முறை கத்தி​யால் குத்​தி​விட்டு தப்பி​விட்​டார். படுகாயம் அடைந்த சயீப் அலிகானை மும்பை லீலாவதி மருத்​துவ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு தீவிர சிகிச்​சைக்​குப் பிறகு அவர் வீடுதிரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசாரணை நடத்​தினர். இந்நிலை​யில், வங்க தேசத்தை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்பவரை தானேவில் போலீஸார் கைது செய்தனர். அவர் சட்ட​விரோதமாக இந்தியா​வுக்​குள் ஊடுரு​வி​யுள்​ளார். பின்னர் ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்ற உண்மையான பெயரை மறைத்து பிஜாய் தாஸ் என்று மாற்றிக் கொண்டு சில மாதங்கள் தானே பகுதி​யில் வசித்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்திருந்தனர்.

SCROLL FOR NEXT