இந்தியா

மதச்சார்பற்ற சொத்து சட்டத்தை பின்பற்ற அனுமதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் பெண் வழக்கு

செய்திப்பிரிவு

மதச்சார்பற்ற சொத்து சட்டத்தை பின்பற்றுவதற்கு அனுமதிக்கக் கோரி முஸ்லிம் பெண் தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அனைத்து மதத்தினரும் பின்பற்றும் வகையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதனிடையே, உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அந்த மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண் சஃபியா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது மகன் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை, எனது மகள்தான் பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் எனது சொத்துகள் முழுவதையும் எனது மகள் பெயரில் எழுதி வைக்க விரும்புகிறேன். தன் வாழ்நாள் முழுவதும் எனது மகனை, எனது மகள் பார்த்துக் கொள்வார். ஷரியா சட்டத்தின் கீழ், பெற்றோரின் சொத்து பிரிக்கப்பட்டால், சொத்தில் மூன்றில் 2 பங்கு மகனுக்கும், ஒரு பங்கு மகளுக்கும் கிடைக்கும். ஒருவேளை எனது மகன் இறந்துவிட்டால், எனது மகளுக்கு சொத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கும். மகனுக்கு உரிய சொத்து அவரது உறவினருக்குச் சென்றுவிடும்.

எனவே, மதச்சார்பற்ற சொத்துச் சட்டத்தை முஸ்லிம் பெண்ணான நான் பின்பற்ற அனுமதிக்கவேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதி, 4 வாரங்களுக்குள் பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

SCROLL FOR NEXT