சட்டவிரோத குடியேற்றத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா பேசியுள்ளார். இந்நிலையில் இதற்கு பாஜக கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங்கின் ஆலோசகராக செயல்பட்டவருமான சாம் பிட்ரோடா, அண்மையில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது: டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில், வங்கதேசத்தவர் சட்டவிரோத குடியேற்றம் ஒரு சூடான விஷயமாக பேசப்பட்டு வருகிறது. டெல்லி போலீஸாரும் ஆங்காங்கே சோதனை நடத்தி வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களை கைது செய்து வருகின்றனர்.
பசியால் வாடும் ஏழைகளான குடியேறிகளை வேட்டையாடுவதை விட புவி வெப்பமடைதல் போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் இங்கு வரவேண்டும் என்று விரும்பினால், அவர்கள் இங்கே வரட்டும். சட்டவிரோத குடியேற்றம் தவறு என்றாலும், நாம் சட்டவிரோதமாக வந்த வங்கதேசத்தவர்களையும், சிறுபான்மையினரையும் குறிவைத்து பிடிக்க மும்முரமாக இருக்கிறோம். நாம் அனைவரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதற்காக நாம் சிறிது கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் பரவாயில்லை. இவ்வாறு அந்த வீடியோவில் சாம் பிட்ரோடா தெரிவித்தார்.
இந்நிலையில் சாம் பிட்ரோடா கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியுள்ளதாவது: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வலது கரமாக செயல்படும், சாம் பிட்ரோடா, சட்டவிரோத குடியேறிகளுக்காக வாதிடுவது பொறுப்பற்றது. இதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் எவ்வாறு நம் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் குடியேற்றுவதற்கு அனுமதித்தது என்று நாம் புரிந்து கொள்ளலாம். இந்த விஷயம் மிகவும் முட்டாள்தனமானது. சட்டவிரோத குடியேற்றத்தை அனுமதிக்கலாம் என்று சாம் பிட்ரோடா பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.