இந்தியா

மகா கும்பமேளாவில் அகிலேஷ் யாதவ் புனித நீராடல்: இடைத்தேர்தல் லாபத்துக்காக என விமர்சனம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று புனிதக்குளியல் முடித்தார். இதை அவர் அயோத்யாவின் மில்கிபூரில் நடைபெறும் இடைத்தேர்தலுக்காக செய்திருப்பதாகச் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

மகரசங்ராந்தியை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், ஹரித்துவார் சென்றிருந்தார். தம் குடும்பத்தின் மூத்த உறுப்பினரின் அஸ்தியை கரைக்கச் சென்றவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த உபியின் கன்னோஜ் எம்பியான அகிலேஷ், ‘புண்ணியம் தேடவும், தம் பாவங்களை கரைக்கவும், தானம் செய்யவும் கும்பமேளா செல்கின்றனர். நான் தானம் அளிக்க கும்பமேளா செல்வேன். இதற்காக என்னை தாயான கங்கை அழைக்கும் போது செல்வேன். ஊடகங்களில் பிரபலம் தேடவும், புகழுக்காகவும் செல்ல மாட்டேன்.’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர் திடீரென நேற்று மாலை மகா கும்பமேளா சென்று புனிதக்குளியலை முடித்துள்ளார். இது குறித்து அகிலேஷ் கூறும்போது, ‘மொத்தம் 11 முறை மூழ்கி புனிதக்குளியலை முடிக்க எனக்கு இந்த திரிவேணி சங்கமத்தில் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் நாட்டில் மதநல்லிணக்கத்தையும், அனைவரும் முன்னேறி நாட்டை வளமைப்படுத்த வேண்டும் எனவும் சங்கல்பம் கொண்டேன். குறைந்த நிதி, வசதிகளிலேயே நாம் சமாஜ்வாதி ஆட்சியில் கும்பமேளாவை நடத்தியது நினைவில் உள்ளது.

சிலர் திரிவேணியில் மனஅமைதிக்காக எந்த விளம்பரமும் இன்றி சடங்குகளை முடிக்க வேண்டும். சிலர் இங்கு தன் அமைச்சரவையுடன் நீர் விளையாட்டுகள் நடத்தவும் வருகின்றனர்.’ எனத் தெரிவித்தார்.தனது புனிதக்குளியலுக்கு பின் அகிலேஷ் முக்கியத் துறவிகள் மற்றும் சங்கராச்சாரியர்களையும் சந்தித்து அவர் ஆசி பெற்றார். இஸ்கான் முகாம் மற்றும் கின்னர் அகாடாவிற்கும் அகிலேஷ் சென்றிருந்தார். இஸ்கான் நடத்தும் இலவச உணவு கூடத்திற்கும் சென்று வந்தார். இதில் அவர், சங்கராச்சாரியர் சுவாமி அவிமுக்தேஷ்வராணந்தாவை சந்தித்த படம் இணையதளங்களில் வைரலாகிறது.

உபியின் அயோத்யாவிலுள்ள மில்கிபூர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் சமாஜ்வாதி எம்எல்ஏவாக இருந்த அவ்தேஷ் பிரசாத், அயோத்யா மக்களவையின் எம்பியாகி விட்டார். இதனால், மில்கிபூரில் சமாஜ்வாதி மற்றும் பாஜகவிற்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இங்கு எம்பியான அவ்தேஷின் மகன் அஜீத் அவ்தேஷ் சமாஜ்வாதியிலும், பாஜகவில் தலீத் சமூகத்தின் சந்திரபான் பாஸ்வானும் போட்டியிடுகின்றனர்.

பிப்ரவரி 5 இல் நிகழும் இந்த தேர்தல் சமயத்தில் அரசியல் ஆதாயத்திற்கு அகிலேஷ் கும்பமேளா வந்ததாகவும் சர்ச்சைகள் உள்ளன. இதற்குமுன் 2019 இல் அகிலேஷ் கும்பமேளாவிற்கு வந்து புனிதக்குளியல் செய்துள்ளார்.இது குறித்து உபி பாஜகவின் செய்தி தொடர்பாளரான ராகேஷ் திரிபாதி கூறும்போது, ‘கும்பமேளாவின் சங்கமக் குளியலுக்கு பின் அகிலேஷின் எண்ணங்களில் சூடு குறையும் என நம்புகிறேன்.’ எனத் தெரிவித்தார்.

உபியின் முன்னாள் முதல்வரான அகிலேஷின் கும்பமேளா விஜயத்தின் போது அவரது மகன் அர்ஜுன் யாதவும் உடன் இருந்தார். சமாஜ்வாதியின் நிறுவனரும், அகிலேஷின் தந்தையுமான மறைந்த முலாயம்சிங்கும் இங்கு புனிதக்குளியலுக்காக வந்துள்ளார்.

SCROLL FOR NEXT