வறண்ட நிலப்பகுதியை 8 ஆண்டுகளில் வளமான வனப்பகுதியாக மாற்றியுள்ளார் இந்தூரை சேர்ந்த டாக்டர் சங்கர் லால் கார்க். இவரை இந்தூரின் ஹீரோ என்று செல்லமாக அழைக்கின்றனர்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் சங்கர் லால் கார்க். பேராசிரியரும், விஞ்ஞானியுமான இவர் 2015-ம் ஆண்டில் இந்தூருக்கு அருகிலுள்ள மாவ் டவுன் பகுதியிலுள்ள ஒரு வறண்ட நிலத்தை வாங்கினார். சிறு குன்றுகள் அமைந்த இந்தப் பகுதியில் கல்லூரியோ அல்லது பள்ளியோ அமைக்கலாம் என டாக்டர் கார்க் விரும்பினார். வேர்ல்ட் ரிசர்ச்சர்ஸ் அசோசியேஷன் இயக்குநராகவும் அவர் இருக்கிறார்.
ஆனால், அது கைகூடாமல் போகவே, இந்த இடத்தை பசுமையான நிலமாக மாற்ற விரும்பினார். இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் நீர்ப்பாசனத்துக்கு தேவையான ஆழ்குழாய் கிணறுகளை அமைத்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு வகையான பழ மரக்கன்றுகளையும், செடிகள், தேக்கு போன்ற மரக்கன்றுகள் போன்றவற்றையும் நட்டார்.
பின்னர் இந்தப் பகுதிக்கு கேஷர் பர்வத் என்று பெயரிட்டார். ஜூலை 2016 முதல் ஆகஸ்ட் 2024 வரையிலான 8 ஆண்டு காலத்தில் இங்கு 40 ஆயிரம் மரங்களை நட்டு வளர்த்து மிகப்பெரிய வனப்பகுதியாக மாற்றிவிட்டார் டாக்டர் கார்க்.
வறண்ட நிலத்தை வனமான வளப்பகுதியாக மாற்றி அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திவிட்டார். பசுமையான வனப்பகுதியாக மாறியுள்ள இந்த கேஷர் பர்வத்துக்கு தற்போது இயற்கை விரும்பிகள் அதிகம் வரத் தொடங்கிவிட்டனர்.
இதுகுறித்து 74 வயதாகும் டாக்டர் கார்க் கூறியதாவது: கேஷர் பர்வத் வனப்பகுதியில் ஏராளமான மரங்களை வளர்க்கிறேன். இதற்காக கூடுதலாக எந்தவித உரங்களை நாங்கள் இடுவதில்லை. இங்கு பெய்யும் மழை நீரில் மரக்கன்றுகளுக்கு தேவையான நைட்ரஜனும், சல்பரும் கிடைத்து விடுகின்றன. இயற்கை உரத்தை பயன்படுத்துகிறோம்.
பெரும்பாலும் குங்குமப்பூ காஷ்மீரில் மட்டும்தான் விளையும். அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு இங்கு குங்குமப்பூவை பயிரிட்டு சாகுபடி செய்தோம். 2021-ல் முதன்முதலாக 25 செடிகளில் குங்குமப்பூ பூத்தது. 2022-ல் அது 100-ஆக உயர்ந்தது. 2023-ல் அது 5 மடங்காக பெருகியது. 43 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் நிலவும் பகுதியான மாவ் டவுனில், எப்படி குங்குமப்பூவை வளர்ப்பது என்ற தொழில்நுட்பத்தை நாங்கள் கற்றுக்கொண்டு வளர்த்து வருகிறோம்.
இங்கு வளரும் தாவரங்கள், பல்வேறு விலங்கினங்களை ஈர்த்துள்ளன. இந்த வனப்பகுதிக்கு 30 வகையான பறவைகள், 25 வகையான வண்ணத்துப்பூச்சிகள், நரிகள், முயல்கள், தேள், காட்டுப்பன்றி, ஓநாய்கள் இங்கு வருகின்றன.
இந்த வனப்பகுதியை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இலவசமாக வந்து பார்வையிடலாம். இங்கு கூட்டம் மற்றும் தியான அரங்கு அமைத்துள்ளோம். நிகழ்ச்சி நடத்த விரும்புபவர்கள் இதைப் பயன்படுத்தலாம். மேலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான கிரிக்கெட் மைதானமும் உள்ளது. இப்பகுதி மக்கள் இவரை இந்தூர் ஹீரோ என்றே செல்லமாக அழைக்கின்றனர்.