கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்தில் " சஞ்சய்" என்று பெயரிடப்பட்ட ரோபோட்டிக் நாய் "மியூல் (மல்டி யுடிலிட்டி லெக்டு எக்யூப்மெண்ட்)” கலந்து கொண்டது பார்வையாளர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: எல்லை பாதுகாப்பு, சொத்து பாதுகாப்பு, ரசாயன-உயிரியல்- அணுஆயுத போர் உள்ளிட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் பல செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காகவே இந்த ரோபோ நாய் இந்திய ராணுவத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், வெடிபொருட்களை கண்டறிததல், அகற்றுதல், உளவுத் துறை மற்றும் கண்காணிப்பு பணிகளிலும் திறம்பட இதனை பயன்படுத்தலாம்.
இந்த ரோபோ நாய்கள் 15 கிலோ எடை வரை சுமந்து செல்லும் திறன்கொண்டது. மைனஸ் 40 டிகிரி முதல் 55 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பநிலை வரை இந்த ரோபோ நாய்கள் தங்கு தடையின்றி இயங்கும் தன்மை கொண்டது. இந்திய ராணுவம் இதுவரை 100 ரோபோட்டிக் நாய்களை பல்வேறு பிரிவுகளில் சேர்த்துக்கொண்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.