ஜம்மு: ஜம்முவில் ரஜவுரி மாவட்டத்தில் மர்மநோய் பாதிப்பால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய மருத்துவ அவசர நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோட்ரங்காவில் உள்ள பாதல் கிராமத்தில் மர்ம நோய் பரவி வருகிறது. இதற்கு தற்போது வரை மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, ஜனவரி 12-ம் தேதியிலிருந்து இந்த மர்ம நோய்க்கு 8 பேர் பலியாகி உள்ளனர்.
தொற்று பரவுவதை தடுக்க உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 200 பேர் பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், சில கிராமவாசிகள் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதல் கிராமவாசிகள் அருந்தும் உணவு அல்லது தண்ணீரில் நச்சு ஏதும் கலந்துள்ளதா என்பது குறித்து கண்டறிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மருத்துவ அவசர நிலை கருதி ரஜவுரியில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களின் விடுப்பை மாவட்ட நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து ரஜவுரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அமர்ஜீத் சிங் பாட்டியா கூறுகையில், “ தற்போதுள்ள சுகாதார அவசர சூழலை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு உதவ ஜம்மு-காஷ்மீர் அரசு கூடுதலாக 10 மருத்துவ மாணவர்களை ரஜவுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது" என்றார்.
பாதல் கிராமத்தைச் சேர்ந்த முகமது பாசல், முகமது அஸ்லாம், முகமது ரபிக் குடும்பத்தைச் சேர்ந்த 13 சிறுவர்கள் மற்றும் நான்கு இளைஞர்கள் மர்மநோய் தாக்குதல் காரணமாக கடந்த ஒன்றரை மாதத்துக்குள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, மத்திய குழு மற்றும் மாநில போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, உயிரிழந்தவர்கள் சிலரின் உடல்களில் இருந்து நியூரோடாக்சின் என்ற ரசாயன மாதிரி கண்டறியப்பட்டதையடுத்து அதுகுறித்து விசாரிக்க 11 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.