புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தி கோயிலை வடிவமைத்து கட்டியெழுப்பிய பிரபல கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் சோம்புராவுக்கு (80) இந்தாண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது.
சந்திரகாந்த் சோம்புராவின் தாத்தா பிரபாசங்கர்பாய் ஓகத்பாயும் பிரபல கட்டிடக் கலைஞர் ஆவார். இவரும், பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றவர். சோம்புராவின் குடும்பம் 200-க்கும் மேற்பட்ட கோயில்களை வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
சோம்புராவுக்கு அவரது தாத்தா பிரபாசங்கர்தான் குருநாதர். சந்திரகாந்த் சோம்புரா லண்டனில் உருவாக்கிய அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாதன் கோயில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த கோயிலை உருவாக்கியதற்காக அவருக்கு கடந்த 1997-ம் ஆண்டு சிறந்த கட்டிட கலை நிபுணருக்கான விருதை வென்றுள்ளார்.
மேலும் அவர், குஜராத்தின் காந்தி நகரில் அக்ஷர்தம் கோயிலையும், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் 108 பக்திவிஹார், ஆலயங்களையும் கட்டியுள்ளார். இவரின் கட்டிடக்கலைத்திறன் உலக அளவில் சிறந்த வரவேற்பை பெற்றது.
தற்போது உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 2.7 ஏக்கரில் இரும்பை பயன்படுத்தாமல் பாரம்பரிய நாகர் பாணியில் இவர் உருவாக்கிய அயோத்தி ராமர் கோயில் உலக அளவில் அனைவரையும் கவர்ந்துள்ளது.