இந்தியா

பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது: உத்தவ் தாக்கரே சிவசேனா கோரிக்கை

செய்திப்பிரிவு

மும்பை: மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பால் தாக்கரேவின் 99-வது பிறந்த நாளையொட்டி மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதை, அதற்கு தகுதியற்ற சிலருக்கு வழங்கியுள்ளது. ஆனால் நாட்டில் இந்துத்துவாவின் விதைகளை உண்மையிலேயே விதைத்த பால் தாக்கரேவுக்கு வழங்கப்படவில்லை. இன்னும் ஓராண்டில் அவரது பிறந்த நாள் நூற்றாண்டு வருகிறது. நூற்றாண்டு தொடங்குவதற்கு முன் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது அவசியம்” என்றார்.

விழாவில் கட்சியின் தெற்கு மும்பை எம்.பி. அர்விந்த் சாவந்தும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி புகழாரம்: பால் தாக்கரே பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக பொது நலனில் அவர் காட்டிய அர்ப்பணிப்புக்காக அவர் பரவலாக மதிக்கப்படுகிறார், நினைவுகூரப்படுகிறார். அவர் தனது முக்கிய நம்பிக்கைகளில் சமரசம் செய்துகொண்டதில்லை. இந்திய கலாச்சாரத்தின் பெருமையை மேம்படுத்துவதில் வாழ்நாள் முழுவதும் அவர் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT