நாட்டில் மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், மதநல்லிணக்கத்தை உறுதி செய்யவும் வழிபாட்டு தலங்கள் சட்டம் அவசியமானது என உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனுத்தாக்கல் செய்துள்ளது.
மசூதி இருக்கும் இடங்களில் முன்பு கோயில் இருந்தததற்கான ஆதாரங்கள் உள்ளன என கூறி நாடுமுழுவதும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அங்கு ஆய்வு மேற்கொள்ளவும் சில நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில் வழிபாட்டு தலங்கள் சட்டத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பாஜக.வைச் சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய், முன்னாள் எம்.பி சுப்பிரமணிய சுவாமி மற்றும் இதர இந்து அமைப்புகள் வழிபாட்டு தலங்கள் சட்டத்துக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளனர். ‘‘ எதிர்காலத்தின் மீதுதான் நாட்டின் கவனம் இருக்க வேண்டும், கடந்த காலத்தில் நடைபெற்ற அராஜகங்களை சரிசெய்ய முயற்சிக்க கூடாது’’ என அயோத்தி வழக்கு தீர்ப்பு உட்பட பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழிபாட்டு தலங்கள் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் உள்நோக்கத்துடனும், மதச்சார்பின்மை கொள்கைகளை குறைத்து மதிப்பிடும் தீய முயற்சியாக இருப்பதுபோல் உள்ளது. வழிபாட்டு தல சட்டத்தில் எந்த மாற்றங்கள் செய்தாலும், அது நாட்டின் மத நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதிக்கும். இதன் மூலம் நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
வழிபாட்டு தல சட்டத்துக்கு எதிரான மனுக்கள் கேள்விக்குரிய உள் நோக்கங்களை கொண்டுள்ளது. வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் 2, 3 மற்றும் 4-ம் பிரிவுகளுக்கு தற்போது சவலாக இருக்கும் விஷயத்துக்கு மனுதாரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மதச்சுதந்திரத்துக்கான உரிமையை மேம்படுத்துவதில் வழிபாட்டு தலங்கள் சட்டம் முக்கிய பங்கு வகித்து அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சமான மதச்சார்பின்மையை காக்கிறது.
வழிபாட்டு தல சட்டத்தின் 3-வது பிரிவு, ஏற்கெனவே உள்ள மதவழிபாட்டு தலங்களை மாற்றுவதற்கு தடை விதிக்கிறது. 4-வது பிரிவு வழிபாட்டு தலங்களின் சமயத் தன்மைக்கு எதிரான மனுக்களை நீதிமன்றங்கள் விசாரிக்க தடை விதிக்கிறது. இந்தப் பிரிவுகள் காட்டுமிராண்டித்தனமான ஊடுருவல்காரர்கள் உருவாக்கிய வழிபாட்டு தலங்களை செல்லுபடியாக்குவதற்கு முயல்கிறது என கூறி இந்த சட்டப் பிரிவுகளை செல்லபடியற்றது எனவும், அரசியல் சானத்துக்கு எதிரானது எனவும் அறிவிக்க கோரி மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நாடு சுதந்திரம் பெற்றபோது வழிபாட்டு தலங்கள் எப்படி இருந்ததோ அப்படியோ தொடர வேண்டும். இவ்வாறு காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.