முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை தொடர்பாக தயாரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பஞ்சாபி படம், வெள்ளிக்கிழமை திரையிடப்படுவதாக இருந்தது.
இந்நிலையில், அந்த படம் வெள்ளிக்கிழமை வெளியாகாது என்றும், அது தொடர்பாக மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றும் மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1984-ம் ஆண்டு பஞ்சாபில் பிரிவினை கோரி போராடிய தீவிரவாதிகள், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் பதுங்கியிருந்தனர். அவர்களை வெளியேற்ற அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ராணுவ நடவடிக்கை எடுத்தார். இதனால், ஆத்திரமடைந்த இந்திராவின் சீக்கிய மெய்க்காப்பாளர்கள் அவரை சுட்டுக் கொன்றனர்.
இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற மெய்க்காப்பாளர்களை போற்றும் விதமாக ‘கவும் தே ஹீரே’ என்ற பஞ்சாபி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 22) வெளியாவதாக இருந்தது. படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரி பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு அளித்தனர்.
இந்நிலையில், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராகேஷ் குமார், திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றார் என்ற புகாரின் பேரில் கடந்த திங்கள்கிழமை மும்பையில் கைது செய்யப்பட்டார்.
‘கவும் தே ஹீரே’ படத்தின் தயாரிப்பாளரும், ராகேஷ் குமாருக்கு லஞ்சம் கொடுத்து தணிக்கைச் சான்றிதழை பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அப்படத்தில் சர்ச்சைக்குரிய கருத்து இடம்பெற்றிருக்கும் நிலையில், அதற்கு தணிக்கை சான்றிதழ் அளிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து மறுஆய்வு செய்யும்படி மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. அதோடு, லஞ்சம் கொடுத்து அந்த படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் பெறப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்தும் விசாரிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்த பஞ்சாபி படத்தை மறு ஆய்வு செய்யப்போவதாகவும், அதன் காரணமாக அந்த படம் வெள்ளிக்கிழமை திரையரங் குகளில் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய செய்தி, மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.