இந்தியா

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 12 நக்சலைட்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சத்தீஸ்கர் மாநிலத்தின் தெற்கு பஸ்தார் பகுதியில் நேற்று நடைபெற்ற என்கவுன்டரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பஸ்தார் பகுதியில் நக்சலைட்கள் சக்தி வாய்ந்த வெடிகுண்டை கடந்த 6-ம் தேதி பதுக்கி வைத்தனர். இதில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் சிக்கியதில் டிரைவர் மற்றும் வீரர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.

வீரர்களின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘ 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சல் தீவிரவாதத்துக்கு முடிவு கட்டப்படும். நமது வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது’’ என்றார்.

இதையடுத்து பிஜப்பூரில் கடந்த 12-ம் தேதி பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு பெண்கள் உட்பட 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பிஜப்பூர் பகுதியில் தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அங்கு நேற்று காலை நடைபெற்ற குண்டு வெடிப்பில் இரண்டு வீரர்கள் சிக்கி காயம் அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா, ‘‘ எல்லா இடங்களிலும் நக்சலைட்டுகள் குண்டு வைக்கின்றனர். பிஜப்பூரில் அவர்கள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது’’ என்றார்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இடையேயும் பிஜப்பூரில் நேற்று தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT