அலுவலக பணிச் சுமையால் என் மகளின் குழந்தைப் பருவத்தை அனுபவிக்க தவறிவிட்டேன் என பெண் கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.) வேதனை தெரிவித்துள்ளார்.
நீது மொஹாங்கா ஒரு கணக்கு தணிக்கையாளர். தொடக்க காலத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். ஒரு நாளைக்கு 14 மணி நேரம் அலுவலக வேலையில் மூழ்கி இருந்ததால் அவரது குடும்பத்தினரை கவனிக்க முடியாமல் போய் உள்ளது. ஒரு கட்டத்தில் இதை உணர்ந்த அவர் வேலையை விட்டுவிட்டு, மனவள பயிற்சியாளராக உள்ளார்.
வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என எல் அன்ட் டி தலைவர் எஸ்.என்.சுப்ரமண்யம் சமீபத்தில் கூறியிருந்தார். இது விவாதப் பொருளாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், சமூகவலைதளத்தில் நீது மொஹாங்கா பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர், “வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என எல் அன்ட் டி தலைவர் கூறியதைக் கேட்டேன். வீட்டில் என்னதான் செய்யப் போகிறீர்கள் என்று தனது ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார். 10 ஆண்டுக்கு முன்பு நானும் அப்படித்தான் இருந்தேன். தினமும் 14 மணி நேரம் வேலை செய்தேன். இப்படி வேலை செய்வது கவுரவமாகவும் இருந்தது. அதிகாலை 3 மணிக்கு மின்னஞ்சலுக்கு பதில் அளித்திருக்கிறேன். ஆனால் என் மகள் முதல் காலடி எடுத்து வைத்தது முதல் அவளுடைய குழந்தைப் பருவத்தை அனுபவிக்க தவறிவிட்டேன்.
எப்போது நான் இதை நிறுத்தினேன் தெரியுமா? என் மகள் 5 வயதில் என் குடும்ப உறுப்பினர்களை ஓவியமாக வரைந்தாள். அதில் நான் இல்லை. இதுகுறித்து அவளுடைய ஆசிரியர் கேட்டபோது, ‘என் அம்மா எப்போதும் அலுவலகத்தில்தான் இருப்பார்’ என கூறியிருக்கிறாள். அந்தப் படத்தை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். நினைவுப் பொருளாக அதை வைத்திருக்கவில்லை. வெற்றிக்கு பதில் அதன் தாக்கத்தை அளவிட வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்காக அதை வைத்திருக்கிறேன்.
ஒரு வாரத்தில் 55 மணி நேரத்துக்கு மேல் பணிபுரியும்போது செயல் திறன் குறைகிறது. அதுமட்டுமல்லாமல், உடல்நிலை பாதிக்கப்படுவதுடன் குடும்ப உறுப்பினர்களின் பாசத்தையும் படைப்பாற்றலையும் இழக்க நேரிடுகிறது” என்றார்.