இந்தியா

தேர்தல் முடிவு குறித்த ஜூகர்பெர்க் கருத்து: இந்தியாவிடம் மன்னிப்பு கோரியது மெட்டா

செய்திப்பிரிவு

இந்திய தேர்தல் முடிவு குறித்து மார்க் ஜூகர் பெர்க் தெரிவித்த கருத்தில் கவனக்குறைவான பிழை ஏற்பட்டதாக கூறி இந்தியாவிடம் மெட்டா இந்தியா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்ற சமூக ஊடகங்களை இயக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் மெட்டா. இந்நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் சமீபத்தில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டியில், ‘‘ கரோனா தொற்றை சரியாக கையாளாத காரணத்தால், இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள தற்போதைய அரசுகள் கடந்த 2024-ம் ஆண்டில் தேர்தல் தோல்வியை சந்தித்தன’’ என கூறியிருந்தார்.

இதையடுத்து தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பதுறையின் நாடாளுமன்ற குழுவுக்கு தலைமை தாங்கும் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே கூறுகையில், ‘‘ தவறான தகவல் தெரிவித்து, ஜனநாயக நாட்டின் கவுரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மார்க் ஜூகர் பெர்க் தெரிவித்த கருத்துக்காக, எனது குழு, மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பும். இதற்காக இந்திய நாடாளுமன்றத்திடமும், இந்திய மக்களிடமும், மெட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என கூறியிருந்தார்.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும், ‘‘ஜூகர்பெர்க் தெரிவித்த கருத்து தவறானது’’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மெட்டா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் சிவ்நாத் துக்ரல் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: பல நாடுகளில் 2024-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தற்போதைய அரசுகள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என மார்க் ஜூகர்பெர்க் கூறியிருந்து உண்மை. ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல. இந்தியாவை சேர்த்து அவர் தெரிவித்த கருத்து கவனக்குறைவாக ஏற்பட்ட பிழை. மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்த கருத்துக்காக மெட்டா இந்தியா நிறுவனம் மன்னிப்பு கோருகிறது. மெட்டா நிறுவனத்துக்க இந்தியா முக்கியமான நாடாக உள்ளது. இந்தியாவின் புதுமையான எதிர்காலத்தில் நாங்கள் எப்போதும் முக்கிய இடத்தில் இருப்பதை விரும்புகிறோம். இவ்வாறு சிவ்நாத் துக்ரல் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT