வாரத்தில் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற பரிந்துரையில் தனக்கு உடன்பாடு இல்லை என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமண்யம் அண்மையில் கூறினார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் நேற்று திறக்கப்பட்ட பிறகு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
கட்டுமானப் பணியில் ஈடுபட்ட எல் அண்ட் டி நிறுவனம், அதன் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எல் அண்ட் டி நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில் வாரத்தில் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று எல் அண்ட் டி தலைவர் கூறியதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.
8 மணி நேர வேலைக்கு பிறகு ஒரு தொழிலாளி சோர்வடைகிறான். அதனால்தான் நேருவும் அம்பேத்கரும் தொழிற்சாலை சட்டத்தை இயற்றும்போது தொழிலாளர்களை 8 மணி நேரத்துக்கு மேல் வேலைசெய்ய வைக்கக் கூடாது என்று கூறியிருந்தனர். இவ்வாறு கார்கே பேசினார்.